பொறாமை ஒரு எலும்புருக்கி நோய் என்று நீதிமொழிகள் 14:30 சொல்கிறது, இது மிக சாதாரணமாக நம்மிடையே காணப்படும் ஒரு நோய். நமக்கு தேவையானவைகளை தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளாமல் அடுத்தவனை அல்லது அயலானை பார்த்து பொறாமை கொள்வதே இதன் மூல காரணம்.
பொறாமை ஒன்றும் இந்த கிருபையின் காலத்தில் அறிமுகமானது இல்லை. நியாயபிராமண காலத்தின் முன்பே பொறாமை என்ற பாவம் இருந்ததாக வேதம் கூறுகிறது. ஆதியாகமம் 26ம் அதிகாரத்தில், ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கு தான் வாழ்ந்த காலத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமேலேக்கு ஊராகிய கேரார் என்னும் நகரத்திலே குடிபெயர்ந்தான். ஈசாக்கு அந்த தேசத்திலே நிலங்களை சீர்படுத்தி விதை விதைத்தான் [ஆதியாகமம் 26:12]. கர்த்தர் அவனை ஆசீர்வதித்தபடியால் அந்த வருடத்தில் நூறு மடங்கு பலனடைந்து, பெரிய பணக்காரனானான் என்று வேதம் சொல்லுகிறது. அவனுக்கு ஆடும், மாடும் பெருகி, நிறைய பணிவிடைகாரர்கள் இருந்தபடியால், அருகிலுள்ள பெலிஸ்தர்கள் அவன்மேல் பொறாமைக்கொண்டார்கள் என்று 14ம் வசனத்தில் படிக்கிறோம்.
பொறாமை ஏன் எலும்புருக்கி என்று வேதம் சொல்கிறதென்றால், பெலிஸ்தர்கள் தங்கள் மனதில் பொறாமைக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஈசாக்கு தன் வேலையாட்களைக் கொண்டு வெட்டி வைத்த அவன் துரவுகளையெல்லாம் தூர்த்து, மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள் [ஆதியாகமம் 26:12] . [துரவு என்றால் கிணறு அல்லது பெரிய கால்வாய்]. ஒரு விவசாயியாய் அவர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார் என்பதை யோசித்துப்பாருங்கள்.
இவ்வாறாக பலமுறை அயலாரின் பொறாமையின் விளைவாக துன்பத்தை அனுபவித்த ஈசாக்கின் சந்ததியை தேவன் ஆசீர்வதித்து, அதே பெலிஸ்தரின் ராஜாவான அபிமேலேக்கு அவருடன் சமாதானமாக போகச்செய்தார் என்று 29ம் வசனத்தில் படிக்கிறோம். நாமும், "ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் [1 பேதுரு 5:6]" என்ற வசனத்திற்கேற்ப, சண்டையிடாமல் பொறுமையாய் அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்போம்.
1. கொடுமையுள்ளவன் மீது பொறாமைக்கொள்ளாதே [நீதிமொழிகள் 3:31]
2. உன் மனதை, பாவிகள் மேல் பொறாமை கொள்ள விடாதே [நீதிமொழிகள் 23:17]
3. பொல்லாத மனுஷர் மேல் பொறாமைக கொள்ளாதே [நீதிமொழிகள் 24:1]
4. துன்மார்க்கர் மேல் பொறாமை கொள்ளாதே [நீதிமொழிகள் 24:19]
மனுஷன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாய் இருக்கிறது என்று பிரசங்கி 4:4 ல் கூறுகிறார்.
எப்படித்தான் இந்த பொறாமை என்னும் அசுத்த ஆவியிலிருந்து நம்மை விலக்கி காத்துக்கொள்வது. உலகிலே இதற்கான மருந்து "அன்பு" மட்டும் தான். ஒரு தகப்பன் தான் உயிராய் நேசிக்கும் தன் மகனோ, மகளோ ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, கை நிறைய சம்பளம் வாங்கி, மகிழ்ச்சியாய் வாழுவதைக்கண்டு பொறாமைப்படுவானா? காரணம் தகப்பன் தன் பிள்ளையின் மீது வைத்திருக்கும் கபடற்ற அன்பே. கலாத்தியர் 5:26ல் சொல்லியிருக்கிறதைப் போல, வீண் புகழ்ச்சியை விரும்பாமல், ஒருவரைஒருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம், ஆமென்.
.jpg)