பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

 


புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான். அவன் செய்த ஜெபமும், தருமமும் தேவசமுகத்தை எட்டுமளவுக்கு அவன் தேவனுக்கு பயந்து நீதிமானாக நடந்தான். அவனையும் அவன் குடும்பத்தாரையும் ஆவியில் இன்னும் பலப்படுத்த, பேதுருவை அனுப்ப தேவன் சித்தமாயிருந்தார் என்று நாம் வேதத்தில் படிக்கிறோம்.

அதே வேளையில், யோப்பா என்னும் பட்டணத்தில் தங்கியிருந்த பேதுரு ஒரு தரிசனத்தைக் காண்கிறார். வானத்திலிருந்து ஒருவிதமான கூடு இறங்கி தரையில் விடப்பட்டிருப்பதாகவும், அதிலே பூமியிலே உள்ள சகலவிதமான நான்குகால் மிருகங்களும், ஆகாயத்து பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டார். கூடவே பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று சொல்லும் ஒரு சத்தத்தையும் கேட்டார். அதற்கு பேதுரு, அப்படியல்ல ஆண்டவரே தீட்டான யாதொன்றையும் நான் ஒருபொழுதும் புசிப்பதில்லை என்று பதிலளித்தார். அப்பொழுது "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்ற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 

இந்த வேளையில், கொர்நேலியு அனுப்பிய நபர்கள் பேதுருவிடம் வந்தனர். முழு செய்தியையும் கேள்விப்பட்ட பேதுருவால் தேவனுடைய தரிசனத்தை முழுவதுமாக உணர முடிந்தது. பொதுவாக யூதர்கள் அந்நிய ஜாதி (சமாரியர்கள், ரோமர்கள்..) மக்களுடன் கலந்து, அவர்களிடத்தில் எந்த ஒரு போக்குவரத்தும் வைத்துக்கொள்வதில்லை.  அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு தேவன் தனக்கு காண்பித்திருக்கிறார் என்ற சத்தியம் பேதுருவும் தெரியவந்தது. உடனடியாக கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்ற பேதுரு, அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்று கூறி சுவிசேஷத்தை கூறினார் என்று அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் தியானிக்கிறோம்.

பேதுருக்கான இந்த தரிசனம், பரிசுத்த வேதாகமத்தின் மூலமாக தேவனுடைய பிள்ளைகளான நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவன் பரிசுத்தமாய் அவருடைய சாயலில் படைத்த மனிதர்களை "சாதியின்" பேரில் பிரித்து பார்க்கிறோமா? நினைவில் கொள்ளுங்கள், பட்சபாதம் இல்லாத தேவனுடைய பிள்ளைகளான நாம் பிரிவினைகளை நம்முடைய இருதயத்திலே அனுமதித்தால், நம்மை எதிர்த்து நிற்பது தேவன் மட்டுமே!



பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

  புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்த...