ஆதாமின் மகனான சேத்தின் வழிவந்த ஏழாம் தலைமுறையே ஏனோக். ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் [ஆதியாகம் 5:21,22]. ஏனோக்கின் முன்னோர்களின் ஆயுசுநாட்களை பார்க்கையில், இவர் மிகச்சீக்கிரமாக தமது 365 ஆவது வயதில் முதலாம் மரணத்தை அனுபவிக்காமல் தேவனிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ஏனோக் உயிரோடிருந்த காலங்களில் தேவனுக்கு பிரியமானவனாக, அவரோடே சஞ்சரித்தார் என வேதத்தில் படிக்கிறோம். ஆங்கில மொழிபெயர்ப்பில் தேவனோடு நடந்தார் அல்லது தேவனின் வார்த்தைகளின் படி நடந்தார் என பொருள்படுகிறது. எபிரேயர் 11:5 ல் ஏனோக்கைக் குறித்து "விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்" என்று தேவனின் மீதான அவருடைய விசுவாசம் சாட்சியாக பகிரப்பட்டிருக்கிறது.
நாம் கூட கர்த்தராகிய தேவனை விசுவாசிக்கிறோம். அவர் குமாரனாய் இந்த உலகத்தில் பிறந்தார், அடிக்கப்பட்டு சிலுவையில் அறையுண்டு அடக்கம் பண்ணப்பட்டார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றும் தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்பதை ஆணித்தரமாக விசுவாசிக்கிறோமே?. ஆம், இதுவும் அவர் விரும்பும் விசுவாசம்தான். ஆனால் ஏனோக் தேவனோடு அனுதினமும் சஞ்சரித்தார் என்று படிக்கிறோமே?. வானாதி வானங்களை உண்டு பண்ணின தேவன் மனிதரோடு சரிசமமாய் நடக்கக்கூடியவர், மனுஷரின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர் என்ற நம்பிக்கையே பெரிய விசுவாசம் அல்லவா? அப்படி தேவனோடு நடந்த ஏனோக்கு அதன் மூலம் தேவனிடத்திலிருந்து பிரியத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், ஏனோக் தேவனிடத்தில் பேசிய வார்த்தைகளையும், தேவன் அவருக்கு காட்டிய தரிசனங்களையும், அக்காலத்தில் பாவத்தில் வாழ்ந்த மக்களிடம் சொல்லி அவர்களை மனந்திரும்புதலுக்குள் வழிநடத்தினார் என்பதை யூதா 1:14,15 வசனங்களின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். [ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்]. இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் இரண்டாம் வருகையை, ஆதாமின் காலத்தில் வாழ்ந்த ஒருவரால் முன்னறிவிக்க முடிகிறது என்றால், அவருக்கும் தேவனுக்கும் உள்ளான உறவை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
இன்று நாம் போகின்ற, கண்களுக்கு இன்பமான அந்த வழி தேவனுடைய வழிகளோடு முரண்படுமாயின், நாமும் அந்த வழியைவிட்டு தேவனிடம் திரும்பவேண்டும். “மனுஷருக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு. அதன் முடிவோ மரண வழிகள்” (நீதி.14:12) என்று வேதம் கூறுகிறது. கர்த்தரோடுகூட சஞ்சரிக்கும்படியாக நம்மை நாமே அர்ப்பணிப்போமா?. ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.