பொதுவாக உலகப் பிரகாரமான எல்லா புத்தகங்களும், ஒரு மங்களகரமான முன்னுரையுடன் தொடங்கும். ஆனால் எனது பார்வையில், இந்த சங்கீத புத்தகத்தின் முதல் அத்தியாயம் ஒரு எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. நீதிமானுக்கும், துன்மார்க்கனுக்குமான வித்யாசத்தை தெளிவாக நமக்கு எச்சரிக்கிறது.
வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், நமக்கு ஒரு ஆலோசகர் தேவைப்படுகிறார். அந்த உலகப்பிரகாரமான ஆலோசகரின் வார்த்தைகளை நாம் சில நேரங்களில் குருட்டுத்தனமாக ஏற்பதும் உண்டு. அதனால் தேவனுடைய நாமம் மகிமைபடுமா அல்லது தூஷிக்கப்படுமா என்பதைக்குறித்து நாம் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை. இதே ஆலோசனைகளை நாம் தேவனினின் சமூகத்தில் வைத்து ஜெபித்து பெறுவதில்லை. இப்படி ஜெபித்து ஆலோசனைகளைப் பெறுபவர்களைத்தான் இந்த அத்தியாயம் முதல் இரண்டு வசனங்களில் பாக்கியவான்கள் என்கிறது.
இவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக்குமாம், நீர்கால்களில் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப்போல இருக்கும். காட்டில் தானாக வளரும் புதர் போல ஒழுங்கீன்மையாய் அல்ல, நடப்பட்டு பேணப்பட்ட நேர்த்தியாய் வளர்க்கப்பட்ட மரத்தைப் போல இருக்குமாம். தன் காலத்தில், தன் கனியைக் கொடுத்து, மற்றவர்களுக்குப் பிரயோஜனமாய் இருக்குமாம். அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று மூன்றாம் வசனம் சொல்கிறது.
துன்மார்க்கர்கள் அப்படியிராமல், காற்று பதறடிக்கும் பதரைப்போல, நன்மைகளை அனுபவியாமல், நிலைத்து நிற்காமல், மற்றவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லாமல் வாழுவான் என்று வேதம் கூறுகிறது. அவனுடைய வழி அழியும் என்ற கடினமான எச்சரிக்கையையும் வேதம் தெளிவாக கூறுகிறது.
மிகவும் சிறிய சங்கீதம், சிறுவயதிலிருந்து பலமுறை மனப்பாடம் செய்த வசனங்கள், ஆனாலும் நம் சபைகளிலும் நம்மை சுற்றிலும் தினமும் இந்த பதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த புதர்களை, திண்ணமான அரிசிகளாக்க தேவனுடைய ஆலோசனைகளை நம் தின ஜெபங்களில் கேட்ப்போமா?
6-Nov-2022
