இன்றைய கிறிஸ்தவர்களிடம் வேதாகமத்திலுள்ள ஒரு பெரிய ராஜாவின் பெயரைச் சொல்லச்சொன்னால் தொண்ணூறு சதவீதம் பேர் முதலில் சொல்லும் பெயர் தாவீது ராஜா. ஏசு கிறிஸ்துவுடன் வாழ்ந்த சீடர்கள் எழுதிய சுவிசேஷ புத்தகங்களில் ஏசுவுக்கு கொடுக்கும் அறிமுகமே இவ்வாறாகத்தான் தொடங்குகிறது, மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு. இதுமட்டுமல்லாமல் ஈசாயின் மகனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன் (அப்போஸ்தலர் 13:22) என தேவன் சாட்சிக் கூறுமளவுக்கு தேவனின் சித்தத்தின்படி தாவீது வாழ்ந்தான்.
இப்படிப்பட்ட ராஜா தன வாழ்நாளின் பெரும்பான்மையான காலம் தன் எதிரிகளுக்கு பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தான் என்பதை நம்மால் நம்ப முடிகிறதா? தாவீதைக் கொல்ல வேண்டுமென வெறித்தனமாக இஸ்ரவேல் முழுவதும் 10 ஆண்டுகளாக துரத்தின மனிதன்தான் சவுல். சவுல் தற்கொலை செய்து கொண்டதை நாம் அறிவோம் (1 சாமு 31). ஓர் அமலேக்கிய மனுஷன் தாவீதிடம் விரைந்து வந்து, தாவீதின் மனதிலே இடம் பிடிப்பதற்காக ஒரு பொய்யைச் சொன்னான். சவுலின் வேண்டுகோளுக்கிணங்க, தான் சவுலைக் கொன்றுவிட்டதாகக் கூறி, அவனுடைய முடியையும் (கிரீடத்தையும்), அஸ்தகடகத்தையும் (கைக்காப்பையும்) தாவீதிடத்திலே கொடுத்தான். தன்னுடைய செயலிலே பூரிப்படைந்து, தாவீது தனக்கு வெகுமதி அளிப்பான் என அவன் எதிர்பார்த்தான்.
ஆனால் அதைக் கேட்ட தாவீதோ, தன்னுடைய வஸ்திரத்தைக் கிழித்து, அழுது. உபவாசித்து, நாள் முழுவதும் சவுலுக்காக துக்கம் கொண்டாடினான் (2 சாமு 1:1-11). கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டவனைக் கொல்வதற்கான தைரியம் அவனுக்கு எங்கிருந்து வந்தது எனக் கேட்டான். சவுலைக் கொல்லத் துணிந்த அந்த அமலேக்கியனைக் கொல்லும்படி தன்னுடன் இருந்த ஒரு வாலிபனிடத்திலே சொன்னான். அம்மனிதன் தான் சொன்ன பொய்யிற்குத் தக்க விலையைப் பெற்றுக்கொண்டான். ஆனால் தாவீதின் மனப்பான்மையைப் பாருங்கள். தாவீதை தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் மாற்றின காரியங்களுள் இதுவும் ஒன்றாகும். "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" என்று இயேசு சொன்னதை நாம் அறிவோம். தாவீது அதைச் செய்துவிட்டான். அவன் பழைய உடன்படிக்கை நாட்களிலே, புதிய உடன்படிக்கையின் மனோபாவத்தைப் பெற்றிருந்தான். தாவீது சவுலை வெறுக்கவில்லை. சவுல் அபிஷேகத்தை இழந்திருந்த நிலையிலும், தாவீதோ எப்பொழுதுமே, "நான் அவனைத் தொடமாட்டேன்" என்றுதான் சொன்னான்.
இந்த ஒய்வு நாளில் நமக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை - தாவீது போல வாழுங்கள். தாவீது பாவம் செய்தான்...பெரிய பெரிய பாவங்கள். இன்றைய உலகம் ச்சீ...என்று காரி உமிழக்கூடிய பாவங்கள். ஆனால் அதையெல்லாம் உணர்ந்து அறிக்கையிட்டு சங்கீதங்களால் புலம்பினான். மீதியான காரியங்களை அவன் தேவனுடைய சித்தத்தின் படி செய்தான். சங்கீதம் 35 ம் அதிகாரத்திப் படித்து பாருங்கள்...அது நம்முடைய தினசரி ஜெபமாக இருக்கட்டும்.
- அடுத்த தலைமுறைக்கான குடும்ப ஊழியம் (16-Oct-2022)
.jpg)