தாவீது ராஜா தன்னுடைய ஆட்சி காலத்தில், ஆண்டவராகிய கர்த்தரின் சித்தத்துக்கு எதிராக பெண் ஆசையினால் செய்த பாவத்தை நாம் 2 சாமுவேல் அதிகாரங்களில் படித்திருப்போம். அந்த அதிகாரங்களை நான் தியானிக்கும்போது, அந்த பாவத்தினால் பாதிக்கப்பட்ட ஏத்தியனாகிய உரியாவின் நேர்மையும், அவனுடைய தேச பக்தியும் என்னை மிகவும் கவர்ந்தது.
2 சாமுவேல் 12ம் அதிகாரம் 7 மற்றும் 8ம் வசனம் இவ்வாறாக கூறுகிறது. "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்".
இவ்வளவு காரியங்களை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டும், உரியாவின் மனைவியின் பேரில் இச்சைக்கொண்டு , தேவனுடைய பார்வைக்கு பொல்லாங்கான காரியத்தை தாவீது ராஜா செய்யதார். அதுமட்டுமல்லாமல், உரியாவின் மனைவி தான் கர்பவதியென்று தாவீதுக்கு சொன்னவுடன், அந்த தவறை மறைக்க பின்வரும் காரியங்களை அவர் தொடர் பாவங்களாகச் செய்தார்.
1. உரியாவை போர் களத்திலிருந்து திரும்பி வரச்செய்து, யுத்தத்தின் செய்திகளை விசாரித்துவிட்டு, இவ்வாறாக சொல்லுகிறார், "பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது".
ஆனால் ராஜாவுக்கும் தேசத்துக்கும் நேர்மையானவனாகிய உரியா, தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான். இதை தாவீது ராஜா கேள்விப்பட்டு கேட்டபோது, "உரியா தாவீதை நோக்கி: என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்"
2. இரண்டாவதாக தாவீது ராஜா, மறுநாள் உரியாவை அரண்மனைக்கு அழைத்து, அவனை குடித்து வெறிக்க பண்ணினான். ஆனாலும் உரியா தன வீட்டுக்குள் பிரவேசிக்கவில்லை.
3. மூன்றாவதாக, உரியா எனப்படும் அந்த நேர்மையான வீரனிடமே, அவனை கொலைசெய்யத்தக்கதான திட்டங்களை கொடுத்து விடுகிறான். இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் பாருங்கள். இந்த காரியம்தான் தேவனை கோபப்படுத்தியிருக்கக் கூடும்.
தாவீது ராஜா தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட மனிதனாக இருந்தாலும், சர்வ வல்ல நியாயாதிபதியான நம் தேவன், அவரின் இந்த பிறர் மனை நோக்கி, உரியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த இந்த பாவத்திற்கான பின்வருமான தண்டனைகளை தருகிறார்.
தண்டனை 1 : 2 சாமுவேல் 12:10 - "இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்". தன வாலிப பிராயத்திலிருந்து சவுலின் பட்டயத்திற்கு பயந்து ஓடிய தாவீது ராஜா, பிற்காலங்கலில் தன் மகன் அப்சலோமின் பட்டயத்திற்கு கடைசி வரை பயந்து ஓடியது வரலாறு.
தண்டனை 2 : 2 சாமுவேல் 12:14 - "ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்". தாவீதின் தவறான உறவினால் பத்சேபாளுக்கு பிறந்த குழந்தை வியாதிபட்டு கேவலமாயிருந்தது என்று வேதம் கூறுகிறது. தாவீது அந்த பிள்ளைக்காக உபவாசித்து, தேவனிடத்தில் மன்றாடிய போதும், அந்த குழந்தை இறந்தது என்று வேதம் கூறுகிறது.
தண்டனை 3 :2 சாமுவேல் 12:11 - "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்". இந்த உக்கிரமான வார்த்தைகளை தேவனிடத்திலிருந்து தாவீது பெற்றார் என்றால் அது உரியாவின் நேர்மையும், ராஜாவின் மேலும் தேசத்தின் மேலும் கொண்ட உரியாவின் விசுவாசமே தேவனுக்கு முன்பாக கோபத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது என் கருத்து. இதன்மூலம் எளியவர்களுக்கும், சிறுமைப்பட்டவருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நம் தேவன் அவரின் கரங்களை உயர்த்துவார் என்பது நமக்கு தெரிகிறது.
2 சாமுவேல் 15:22 இப்படியாக கூறுகிறது, "அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பன் தாவீதின் மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்"
தேவனுடைய உக்கிர கோபாக்கினைக்கு விலகி, நீதிமான்களாய் நடப்போம்! நமக்காக பரிந்து பேசுகிற நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் இடைவிடாமல் ஜெபிக்கிறவர்களாயும், ஆவியானவரின் பிரசன்னத்தை தினமும் உணர்கிறவர்களாயும் வாழுவோம். ஆமென் !
பின்குறிப்பு - தாவீதுவின் கூடவே இருந்த நம்பிக்கையான முப்பத்தியேழு பராக்ரமசாலிகளின் பெயர்களை வேதம் 2 சாமுவேல் 23 ம் அதிகாரத்தில் பட்டியலிடுகிறது, அதில் முப்பத்தி ஏழாவது பெயர் - ஏத்தியனாகிய உரியா!