உயிர்த்தெழுதல்

 


இயேசு இந்த உலகில் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ விதமான போதனைகளின் மூலம் மக்களை நீதியின் பாதைகளில் நடத்தினார். அற்புதங்களின் மூலம் சுகவீனமானவர்களையும், குஷ்டரோகிகளையும் சுகமாக்கினார். ஆனாலும் தன்னுடைய கடைசி நாட்களில் அவருடைய சீடர்களிடம் மட்டுமே, தான் பாடுகள் அனுபவிக்கபோவதைக் குறித்தும், தன்னுடைய மரணத்தைக் குறித்தும், உயிர்த்தெழுதலைக் குறித்தும் கூறினார். ஆனாலும் இதெல்லாம் முன்னேமே வேதத்தில் தீர்க்கதரிசிகளினால் உரைக்கப்பட்டதே. அவர் ஒருமுறை அல்ல, பல முறை இந்த காரியங்களைக் குறித்து தன்னுடைய சீடர்களிடம் சொல்லத்தொடங்கினார். 

மத்தேயு 16:21 ல் "அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்"

22ம் வசனத்தில் "அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்" அதற்க்கு இயேசு அவனைக் கடித்துக்கொண்டு "எனக்கு பின்னாலே போ சாத்தானே" என்ற கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் என்பதை அடுத்த வசனத்தில் நாம் பார்க்கிறோம். 

பேதுரு அவரோடுகூட முழுவதுமாக பயணித்தாலும், அவரின் மரணத்தை முழுவதுமாக நம்பினான், அதனால்தான் அவனின் மாம்ச  சிந்தை வெளிப்பட்டது. அவரின் உயித்தெழுதலைக்குறித்து அவர் சொன்ன காரியங்கள் பேதுருவின் இருதயத்தில் கொஞ்சம் கூட புலப்படவில்லை. அது மட்டும் அல்ல, ஆறு நாட்களுக்கு பின்பு இயேசு பேதுரு முதலான சீடர்களுடன் ஒரு உயர்ந்த மலைக்கு ஜெபிப்பதற்காகச் செல்வார். அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவினிடத்திலே பேசுகிறவர்களாக அவர்களுக்கு காணப்பட்டார்கள். அப்பொழுதும்கூட  "பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்" [மத்தேயு 17:4]

அவரின் மரணத்தைக் குறித்து மிகவும் துக்கப்படுகிறவராய் பேதுருவை நாம் காண்கிறோம். ஆனாலும் அவரோ அல்லது மற்ற சீடர்களோ அவரின் உயித்தெழுதலைக் குறித்து கொஞ்சம்கூட  உணரவில்லை.  மத்தேயு 17:22 & 23 ல் "அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்." 

ஒருவேளை பேதுருவும் அவருடைய சீடர்களும், மரியாள் மற்றும் அவர்களோடிருந்த மற்ற பெண்களும் உயித்தெழுதலைக்குறித்து அவர் சொன்னதை விசுவாசித்திருந்தால் அவரின் மரணத்தைக்குறித்து, துக்கித்திருக்க வாய்ப்பில்லை, மற்றும் அவரின் உடலை பதப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது. 

இப்படியிருக்க யார் அவரின் உயிர்த்தெழுதலை விசுவாசித்தார்கள் என மத்தேயு தனது சுவிஷேசத்தில் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார். 

மத்தேயு 27:62-66 ல் "ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்".

இயேசுவின் சத்துருக்களான, அவரைக் குற்றப்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்ற பிரதான ஆசாரியரும், பரிசேயருமே அவரின்  கடைசி நாட்களில் அவர் மரணத்தைக்குறித்தும், உயித்தெழுதலைக்குறித்தும் அவர்களுக்குச் சொன்ன காரியங்களை விசுவாசித்தார்கள் என்றும், அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து கூறிய அந்த வார்த்தைகள் அவர்களின் மனதை நெருடிக்கொண்டிருந்தது என்பதும், ஒய்வு நாள் என்றுக்கூட பாராமல் அவர்கள் செய்த இந்த காரியம் மூலம் நமக்கு  என்பது மிகத்தெளிவாக தெரிகிறது. 

நாமும் கூட, சத்தியத்தை அறியாத இந்த உலகம் இயேசுவின் உயித்தெழுதலைக் குறித்து சொல்லுகிற அவதூறுகள், இயேசு மரித்தும் சதாகாலம் உயிரோடிருக்கிறார் என்ற அவர்களின் அடிமனதில் உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே என்று விசுவாசித்து அவர்களுக்காக ஜெபிப்போம். 

மத்தேயு 28:6 "அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்"



பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

  புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்த...