உலகபிரகமாக பார்த்தோமானால், "இடறல்" என்பதின் மொழியாக்கம் "தடை" என்று தமிழ் அகராதி சொல்லுகிறது. பரிசுத்த வேதம் "இடறல்" குறித்து என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
எவனொருவன் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் ஒருசில காரணங்களால் தடுமாறி மீண்டும் பாவத்துக்குள் செல்கிறானோ, அதையே வேதம் இடறல் என்ற வார்த்தையினால் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இடறல் பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த தருணத்தில், இடறலை தீவிரமாய் காதலிக்கும் ஒருவனை அறிமுகப்படுத்துவது நம்முடைய புரிதலுக்கு பிரயோஜனமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் - 1 பேதுரு 5:8".
இந்த காரியத்தை பேதுரு தன்னுடைய அனுபவத்தின் மூலம் எழுதியிருக்கிறார். இயேசு இந்த உலகில் வாழ்ந்த குறுகிய கால கட்டத்தில், அவருடனே பெரும்பான்மையான நாட்கள் வாழ்ந்த பேதுருவே, அவர் விழித்திருந்து ஜெபம் பண்ண மூன்றுதரம் சொல்லியும், மாம்ச பலவீனத்தால் நித்திரையாயிருந்து, இடறலுக்குள்ளாகி அவரை மூன்று தரம் மறுதலித்தார். மாற்கு 14:29 இல் "உம் நிமித்தம் எல்லாரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையேன்" என்று தீர்மானமாகச் சொன்ன பேதுரு இடறலடைந்து மறுதலித்தது ஜெபத்தின் குறைச்சலால்தான் என்பதை அவர் உணராமல் இல்லை.
அப்படியானால், நாம் விழித்திருந்து ஜெபிப்பதினால் எப்படி இந்த பொல்லாதவனின் வலையிலிருந்து தப்பிக்க பெலன் / தெளிந்த புத்தி கிடைக்கும் என்பது குறித்து லூக்கா 22:43 இல் "அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோனறி அவரை பெலப்படுத்தினான்" என்று குறிப்பிடுகிறார். அந்த ஜெபத்தில் கிடைத்த பெலத்தின் மூலமாக தான் இயேசு கிறிஸ்த்து இந்த உலகத்தை ஜெயித்தார் என்பதை நாம் உணர்கிறோம்.
மறுதலித்த பேதுரு பின்னர் அதை உணர்ந்து மனங்கசத்து அழுதார் என்பதை சுவிசேஷங்களில் படிக்கிறோம். அதுமட்டுமல்ல, தன்னை மறுதலித்து, பின்னர் மனந்திரும்பிய பேதுருவை தான் மன்னித்து ஏற்றுக்கொண்டத்தை தெரிவித்து, அவரை தேற்றுவதற்காகவும், இயேசு உயித்தெழுந்தபின் அவருக்கு தரிசனமானார் என்பதை லூக்கா 24:34 இல் படிக்கிறோம். ["கர்த்தர் மெய்யாகவே உயித்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு"]
மத்தேயு 4:1 இல் -" அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்". இந்த உலகத்தை இரட்சிப்புக்கு உள்ளாக்கிய மனுஷகுமாரர் கூட தேவனுடைய சித்தத்தின் படி இடறலுக்குள்ளானாரென்றும், அதை அவர் பரிசுத்த வேத வசனங்களினால் ஜெயித்தார் என்றும் மத்தேயு 4ம் அதிகாரத்தில் படிக்கிறோம்.
இது போக, இந்த உலகப்பிரகமான காலத்திலே பலவீனமான விசுவாசிகளை இடறலுக்கு உண்டாக்குகிற மனிதர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை லூக்கா 17: 1 & 2 மற்றும் மத்தேயு 18:6-9 தெளிவாய் விளக்குகிறது.
"1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2. இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்"
ஆதலால் நாம் சோதனைகளுக்கு நம்மைத்தாமே தப்புவிக்க விழித்திருந்து ஜெபிப்போம்! ஒருவரை இருவர் ஜெபத்தில் பலப்படுத்துவோமாக! ஆமென்.